இவ்வுலகிலுள்ள ஜீவராசிகளுள் மாபெரும் வலிமை
படைத்தவன் மனிதன். அதற்கு காரணம் அவனுடைய பகுத்தறியும் திறன். ஏனெனில், ஏனைய
உயிரினங்களுக்கு அளிக்கப்படாத வரப்பிரசாதம் இந்த ஆறாம் அறிவு.பகுத்தறிவை பற்றி பேச
ஆரம்பித்தால் யாரும் தந்தை பெரியாரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவர்,
மற்றவர்கள் பின்பற்றும் மூடநம்பிக்கைகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும்
எடுத்துரைத்தார். சிந்தனை என்பதின் முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தினார். ஆனால்
இன்று இந்த நவீன,சமூகத்தினருக்கு சிந்திக்கும் திறன் குறைந்து வருகிறதா என்ற ஒரு
ஐயப்பாடு ஏற்படுகிறது.ஆங்கிலயேரின் பிடியிலிருந்து சுதந்திரம் வாங்கி, இன்று உலக
நாடுகளில் மிக பெரும் ஜனநாயக நாடாக கருதப்படும் நம் இந்தியா, உண்மையில் அத்தகைய
மாண்புக்கு உரித்தானதா என்று வினவுவோம்.
நம் நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுவது
விவசாயம். என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் நாட்டில் 50
சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நம்பி இருப்பது விவசாயம் மற்றும் அதை சார்ந்த
தொழில்கள் (Agriculture and allied activities).இன்று காலநிலை மாற்றம், பருவ மழை
பொய்த்தல், நிலத்தடி நீர் மாசு போன்ற பல்வேறு காரணங்களால் பல மாநிலங்களில் தண்ணீர்
தட்டுபாடு அதிகரித்துள்ளது. முன்பு பாசனத்துக்கு நீர் கேட்டு குரல் கொடுத்த நாம்
இன்று குடிக்கவே கட்டணம் செலுத்துகிறோம்.
ஒரு லிட்டர் பால் விலையும், சுத்தீகரித்த (CAN)
குடிநீர் விலையும் கிட்டதட்ட ஒன்று தான்.உணவு விளைவிக்கும் விவசாயி மூன்று வேளை
உணவுக்கே போராடும் அவல நிலை இன்று.இத்தகைய சூழலில் நாட்டின் வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திற்கும் மிக முக்கியம் அந்நிய முதலீடு என கூறி நில அபகரிப்பு மசோதா
நிறைவேற்ற முயற்சிகள் நடக்கிறது. விளைநிலங்களை எல்லாம் அந்நிய
முதலீடுக்காக எடுத்துக்கொண்டால் தினம் உண்ணும் உணவை விளைவிப்பது எப்படி ?
சிந்தியுங்கள்.
மசோதா சொல்வது என்ன ?
நில அபகரிப்பு மசோதா என்பது 1894ல் இருந்தே உள்ளது.பின்
அவ்வபோது சிற்சில திருத்தங்கள் செய்யப்படுவது வழக்கம். அப்படி ஒரு திருத்தத்தை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் 2013ல் லோக்சபாவில் கொண்டுவந்தது.ஆனால் தற்போது காங்கிரஸ்
உள்ளிட்ட அனைத்து கட்சிகளிடமும் எதிர்ப்பு வலுக்கிறது.இதற்கு காரணம் தற்போதைய பாஜக
அரசு நில அபகரிப்பு மசோதா 2013ல் கொண்டு வந்த திருத்தங்கள் (பின்வருமாறு).
1.
ஐந்து வருடங்களுக்குள் வேலை (construction of developmental activity) ஆரம்பிக்காவிட்டால் நிலம்
திரும்ப ஒப்படைக்கப்படும் என்று இருந்ததை,அந்த ஒப்பந்த காலம் முடியும் வரை (எத்தனை
வருடங்கள் ஆனாலும்) என்று மாற்றப்பட்டுள்ளது.
2.
பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுக முடியாது அதற்கு பதில், நான்கு மடங்கு
நஷ்ட ஈடு வழங்கப்படும்.
3.
புது சட்ட திருத்தப்படி, விளைநிலங்களையும் அபகரிக்கலாம் !!!
4.
நிலத்தை ஆக்கிரமிக்க சமூக தாக்க மதிப்பீடு (Social impact Assessment) மற்றும்
சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு (Environment
Impact Assessment) தேவையில்லை.
5.
முன்பைபோல் 80% பாதிக்கப்படும் மக்களின் ஒப்புதல் தேவையில்லை.
இத்தகைய
சட்டதிருத்தங்கள் கொண்ட மசோதாவால் தான் இத்தனை எதிர்ப்புகள்.
சோறு போடும் எஜமான்
இந்த அரசு விவசாயிகளின் நண்பன்
என்று வாயார கூறினாலும் செயல்பாடுகளில் எதிராகத் தான் தெரிகிறது.ஒரு நாட்டின்
விவசாயி அழுதால் விரைவில் நாடும் அழும். நெல்லை விளைவித்து அனைவருக்கும் உணவளிக்க
நாள் முழுதும் வயலில் வியர்க்க வியர்க்க உழைக்கும் விவசாயிக்கு நியாயமான குறைந்த
ஆதார விலை (minimum support price) இல்லை. இவர்களின் நிலத்தை பறித்துவிட்டால்
பயிர்களை விளைவிப்பது எப்படி ? சிந்தியுங்கள்....
திடீர் மாற்றம்
சென்ற கூட்டத்தொடர் வரை நில
அபகரிப்பு மசோதாவுக்கு பொருளாதார முன்னேற்றம்,வளர்ச்சி திட்டங்கள் என முன்வைத்த
மத்திய அரசு,தற்போது நதிநீர் இணைப்பை முன்வைத்து மசோதாவை மீண்டும்
சமர்பித்துள்ளது.இதற்கிடையில்,இம்மசோதாவை இரண்டாம் முறையாக மீண்டும் ordinance
மூலம் சட்டமாக்கியுள்ளது சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மாத்தி யோசி
நில அபகரிப்பு மசோதாவால் பயிர்களை விளைவிப்பது
போய் வரவழைப்பது என்றாகிவிடும். ஆம், வெளிநாட்டில் இருந்து உணவு தானியங்களை
இறக்குமதி செய்ய வேண்டிய நிலை வெகு தூரத்தில் இல்லை. அப்படி நடந்தால் என்ன ? இப்பொழுது
கூட நாம் இறக்குமதி செய்து கொண்டுதானே இருக்கிறோம் என்று கூறுபவர்கள்
கவனிக்க.தற்போது ஒன்றிரண்டு உணவு பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்யும் நாம்,
வரும் காலங்களில் ஒரே ஒரு பயிரைத் தவிர அனைத்தையும் காசு கொடுத்து இறக்குமதி செய்ய
வேண்டிய நிலை வரும். ஏனெனில், ஒவ்வொரு நாடும் ஒரு தானியத்தை விளைவிப்பதிலயே
சிறந்து விளங்கும் (monopoly).உலகமயமாக்கல் மற்றும் பெருகி வரும் அந்நிய
முதலீட்டால் அனைத்து நாடுகளும் ஒன்றையுன்று நம்பி இருக்கும். இயற்கை அழிவுகளால்
ஏதோ ஒரு நாட்டில் பஞ்சமோ பட்டினியோ வந்தால் அந்த நாடு ஏற்றுமதி செய்யும் அந்த உணவு
பொருள் வேறெங்கும் கிடைக்காத நிலை உருவாக வாய்ப்புகள் அதிகம். இவையனைத்தும் கற்பனை
என்று நினைக்கும் நீங்கள் இதெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா ?
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால்
நாட்டின் வளர்ச்சியை காரணம் காட்டி ஏழை விவசாயியின் நிலத்தை அபகரிப்பது தவறல்லவா.
விவசாயத்தை மட்டுமே வைத்து முன்னேற்றம் கண்ட பிரான்ஸ் போன்ற நாடுகளெல்லாம் உள்ளது.
அந்நிய முதலீட்டை முழுமையாக எதிர்ப்பவன் அல்ல நான். அதே வேளையில்,அத்தியாவசிய
தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதை செயல்படுத்துவதே அரசின் நோக்கமாக இருக்க
வேண்டும்.ஆனால்,மனிதனின் மிக முக்கிய தேவைகளில் ஒன்றான உணவுக்கு வேராக இருக்கும்
விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் அழித்து நாட்டை வளர்ப்பது சிறந்ததா ? எழுப்புங்கள்
உங்கள் ஆறாம் அறிவை !!!
0 comments:
Post a Comment